ஒரு வீட்டின் முகப்பு அந்த வீட்டின் அடையாளம். முகப்பு எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதே அந்த வீட்டின் தன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்வது. எனவே, பொதுவாக வீட்டின் முகப்பு மிகவும் கவர்ச்சிகரமாக அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் அமைக்கப்பட வேண்டியது முக்கியம் என நினைக்கிறோம். அப்படி அமைக்கும்போது கட்டிடத்தின் வாழ்நாளைப் பாதிக்கும் வகையிலோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு ஒரு காரணியும் அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று பார்க்கலாம்
ஜன்னல் வேலைப்பாடுகள்
பொதுவாக சிறந்த அமைப்பு வர வேண்டும் என்பதற்காக இரண்டு மாடிக்குள் கட்டப்படும் வீடுகளில் ஜன்னல் தனித்தன்மையோடு அமைக்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் பல வடிவங்கள் அமைக்கப்படுகின்றன. ஜன்னல்கள், காற்றோட்டத்தையும் வெளிச்சத்தையும் வீட்டுக்குள் கொண்டுவருபவை. ஜன்னலின் மேல் பாகத்தில் அமைக்கப்படும் கூரை (Sun Shade) வெயிலின் தாக்கமும் மழையும் ஜன்னல் வழி வீட்டுக்குள் விழுவதைத் தவிர்ப்பதற்காக அமைப்படுகிறது.
ஆனால் வித்தியாசமான அமைப்பு வர வேண்டும் என்பதற்காக ஜன்னலை சுற்றியோ அதன் மேற்புரத்திலோ விதவிதமான வடிவங்களில் அழகுபடுத்தும் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை நீரை ஜன்னலின் மேற்கூரை வெளியேற்றிவிட வேண்டியது அவசியம். வித்தியாசமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்படும்போது அங்கு மழை நீர் தேங்கி நிற்க வாய்ப்பாகிறது.
மேலும் பறவைகள் கொண்டு வந்து சேர்க்கும் விதைகள் மூலம் அங்கு செடிகள் வளர்ந்து நிற்பதையும் நாம் பல இடங்களில் பார்க்கலாம். இப்படிப்பட்ட அமைப்புகள் வீட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, வீட்டின் வாழ்நாளையே குறைக்கின்றன.
மொட்டைமாடிக் கைப்பிடிச் சுவர்
ஜன்னலுக்குப் பிறகு இந்த அழகுபடுத்தும் நோக்கில் நாம் வடிவமைக்க முயல்வது மொட்டைமாடிக் கைப்பிடிச் சுவர் கட்டுமானத்தில்தான். மொட்டைமாடித் தளத்தில் இருந்து குறைந்தது ஒரு மீட்டர் உயரத்துக்கு இந்தச் சுவர் அமைக்கபடுவது பாதுகாப்பானது. முகப்பு அழகுக்காக இந்தச் சுவரில் கம்பி வேலைகளை (GRILL) செய்யும் வழக்கமும் உள்ளது. இது பாதுகாப்பானது அல்ல என்பது ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து பராமரிக்க வேண்டியதும் அவசியம். அதனால் அது கூடுதல் வேலையாகும். இப்படித் தேவையற்ற கம்பி வேலைகளைத் தவிர்ப்பது நலம்
கண்ணாடி, கம்பி வேலைப்பாடுகள்
வீட்டை அழகுபடுத்தும் நோக்கில் கண்ணாடியிலோ கம்பியிலோ அமைக்கப்படும் விதவிதமான வேலைப்பாடுகளைப் பார்க்கிறோம். வணிகக் கட்டிடங்களில் செய்யப்படும் விதவிதமான முகப்பு வடிவங்களை ஒத்து நாமும் பிரதி எடுக்க வேண்டிய அவசியமில்லை. தொடர் பராமரிப்பு என்பது வணிகக் கட்டிடங்களில் செய்யப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் வீட்டில் நாம் அவ்வாறு செய்யும் சூழலைத் தவிர்ப்பது நலம்.
பயன்பாடு இன்றி முன்புறத்தில் துறுத்திக்கொண்டு, அலங்காரம் எனும் போர்வையில் நிற்கும் கம்பி வேலைப்பாடுகளை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அவை தேவையா என்பதை நாமே எண்ணிப்பார்த்து முடிவுக்கு வரலாம்.
வெளிப்புறச் சுவர் வண்ணங்கள்
நம்முடைய வீடு நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணக்கலவையால் மட்டுமே தனித்துத் தெரியும். அதிகபட்சம் மூன்று வண்ணங்களுக்கு மிகாமல் நம்முடைய வெளிப்புறச் சுவர் அமைவது சிறப்பு. மிக அதிகமான வண்ணங்களைப் பயன்படுத்துவது சிறப்பாக அமையாது. மேலும் ஒவ்வொரு சிறப்பு வடிவமைப்புக்கும் ஒவ்வொரு வண்ணமாக அமைக்க முற்படுவதும் பார்வைக்கு நன்றாக இருக்காது. வெள்ளை மாளிகை போன்று வெண்ணிறமாகவே வண்ணம் தீட்டப்பட்டு மிகவும் கம்பீரமாக எழுந்து நிற்கும் கட்டிடங்களையும் நாம் கருத்தில் கொள்ளலாம்.
வீட்டின் சுற்றுச்சுவர்
வீட்டின் வெளிப்புற அமைப்புக்குச் சுற்றுச்சுவரின் (COMPOUND WALL) வடிவமைப்பும் அதில் அமைக்கப்படும் கம்பிக் கதவுகளும் முக்கியப் பங்களிக்கின்றன. வீட்டின் தன்மையை ஒத்து சுற்றுச் சுவர் அமைக்கப்பட வேண்டும். நாம் எங்கோ பார்த்த ஒரு சுற்றுச்சுவரைப் போன்றே இங்கும் அமைக்க வேண்டும் என முடிவுக்கு வரக் கூடாது.
வீட்டின் ஒட்டுமொத்த வெளிப்புறத்தோற்றம் என்பது அந்த வீட்டின் பல்வேறு கூறுகள் ஒத்த வடிவமைப்பை ஃ தன்மையை ஃ வண்ணத்தைக் கொண்டு அமைக்கப்படுவது.
என்ன செய்யலாம் ?
வீட்டின் முகப்பு அவசியம் என்றாலும் தேவையில்லாத அமைப்புகளை உருவாக்கி கவர்ச்சிகரமாக அமைக்க வேண்டும் என்று முயலும் போது நாம் வீட்டுக்குப் பாதிப்பையே ஏற்படுத்துகிறோம். எந்த ஒரு வடிவம் அமைக்கும் போதும் அது வீடு இயங்கும் தன்மையைப் பாதிக்காமலும், மிகுந்த பொருட்செலவை ஏற்படுத்தாமலும், பாதுகாப்புத் தன்மையை குலைக்காமலும், பராமரிப்புச் சூழலை ஏற்படுத்தாமலும் இருப்பது மிகவும் சிறப்பு.